18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு

சென்னை:

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீதான தகுதி நீக்கம் வழக்கில் இன்று மதியம் தீர்ப்பு கூறப்பட்டது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில்  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பில், சபாநாயகர் முடிவு செல்லும் என்று கூறி உள்ளார்.

ஆனால், மற்றொரு நீதிபதியான சுந்தர் அளித்துள்ள தீர்ப்பில், சபாநாயகர் தீர்ப்பு செல்லாது என்று அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை, இந்த வழக்கில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவுகள், தடைகள்  தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களை தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் 1.40 மணி அளவில் தீர்ப்பு வெளியானது.

இன்று தீர்ப்பு வெளியாக இருந்ததை தொடர்ந்து சென்னை  உயர்நீதிமன்ற அறை வழக்கறிஞர்கள் மற்றும் கட்சிக்காரர்களின்  கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் தீர்ப்பு குறித்து அறிய  உயர்நீதிமன்றம் வருகை தந்திருந்தனர். அதுபோல முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர்கள் பாபு முருகவேல், திருமாறன் மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்களும் வருகை தந்தன்ர்.

தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ராஜா செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். பார்வையாளர்கள் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இன்றைய தீர்ப்பு காரணமாக தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய நிலையே மேலும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.