சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.  அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

அதன்பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசும், டிரான்ஸ்பர் உத்தரவுகளும் வழங்கப்பட்டன. அதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட 8 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் அரசு அளித்த உத்தரவாதத்தையும் மீறி நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, அதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இது குறித்து சுகாதாரத்துறை செயலர் பதில் அளிக்குமாறு கூறி, விசாரணையை 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.