ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.

படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட…

ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க அவர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறும் திரைப்பட விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு தரக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார் .

இதையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் படத்தில் தான் இயக்குநராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேற்கொண்டு தனக்கு எந்த மிரட்டல்களும் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், காவல்துறையிடம் கொடுத்த புகார் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள அவசியம் இல்லை என தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விநியோகஸ்தர்கள் மிரட்டியதாக கூறி பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்வது, பின்னர், சமாதானம் ஏற்பட்டுவிட்டதாக கூறி காவல்துறையில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க வேண்டும் என தெரிவிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.மேலும், நீங்கள் நினைத்தபடி சென்னை உயர் நீதிமன்றம் செயல்படவேண்டும் என நினைக்கிறீர்களா? எனவும் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு கேள்வி எழுப்பிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.