ஊதியம் தர திண்டாடும் சென்னை பல்கலக்கழகம்

சென்னை

சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது.

இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும்.   சுமார் 161 வருட பழமையான இந்த பல்கலைக் கழகத்துக்கு ஊதியம் வழங்க அரசு சார்பில் நிதி அளிக்கப்பட்டு வருகிறது.  அதைத் தவிர கல்விக் கட்டணமாகவும் நிதி கிடைத்து வருகிறது.   இந்த பல்கலைக்கழகத்தின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அரசு நிதி வழங்கி வருகிறது.

இந்த கணக்கு வருடமான 2019-20 ஆம் வருடத்துக்கான பல்கலைக்கழக நிதிநிலை அறிக்கையில் ரூ.84.29 கோடி பற்றாக்குறை காட்டப்பட்டுள்ளது.   இதனால் அரசின் உதவித் தொகையை அதிகரிக்கும் படி பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.  அத்துடன் கல்விக் கட்டணங்களையும் உயர்த்தி உள்ளது.   ஆயினும் ரூ.35 கோடி பற்றாக்குறை உள்ளது.

இதற்கு எவ்வித நிதி ஆதாரமும் இல்லாமல் கிண்டி மற்றும் தரமணியில் பல்கலை சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.   ஆனால் அதிகாரிகள் அதை மறுத்துள்ளனர்.  ஏழாவது ஊதிய ஆணைய உத்தரவுப்படி ஊதியம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டதால் மாதம் ரூ. 3 கோடி செலவு ஆவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக வருமானம் 27 கோடியாக உள்ளபோது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு மாதம் ரூ.60 கோடி செலவாகிறது  என கூறப்படுகிறது.  தற்போது பல்கலக்கழகத்திடம் உள்ள நிதி மற்றும் வரவை வைத்து கணக்கிடுகையில் இந்த மாதம் மட்டுமே ஊதியம் வழங்க முடியும் எனவும் அடுத்த மாதத்தில் இருந்து பற்றாக்குறை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி அரசின் பல நிதி உதவிகளை தணிக்கை துறை நிறுத்தி வைத்துள்ளது.   இதற்கு முக்கிய காரணம் விளம்பரம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பல பதவிகளுக்கு பணி உயர்வு மூலம் ஆட்களை நியமித்ததே ஆகும்.    இந்த நியமனங்கள் சட்ட விரோதமானவை என்பதால் ஊதிய நிதி உதவியை தணிக்கை துறை நிறுத்தி உள்ளது.

இது குறித்து பல்கலை அதிகாரி ஒருவர், “கடந்த 2017-18க்கான கணக்கு தணிக்கையில் எவ்வித குறையும் கிடையாது.   அதை மனதில் கொண்டு இந்த வருட தணிக்கையை தடை செய்து நிதி உதவி அளிக்கலாம்..   அவ்வாறு செய்தால் அரசு முழு நிதி உதவியை அளிக்க முடியும்.  பல்கலைக்கழக நிதி பிரச்சினை தீரும்” என தெரிவித்துள்ளார்.