மதுரை,

டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமைச் செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமைச் செயலர், வருமான வரித்துறை, விஜிலன்ஸ் துறையினருக்கு ஆவணத்தை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் குட்கா ஊழல் தொடர்பான ஆவங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

டி.கே.ராஜேந்திரன் பதவிக்காலத்தை 2 ஆண்டு நீட்டித்து கடந்த மாதம் 30ந் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த  டி.கே.ராஜேந்திரன் தமிழக டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். ஜூன் 30ந்தேதியுடன்  ஓய்வு பெற இருந்த நிலையில் பதவிக்காலத்தை 2 ஆண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் டி.ஜி.பி. பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், ‘குட்கா விற்பனை செய்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கள்ளத்தனமாக விற்க அனுமதித்ததாக, டிஜிபி., ராஜேந்திரன் மீது புகார் எழுந்துள்ளது. தற்போது அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. அதனால், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்; இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டடிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை உயர்நீதி மன்ற கிளை,  டிஜிபி பதவி நீட்டிப்பு குறித்த ஆவணங்களை தாக்க செய்ய உத்தரவிட்டது.

இதுகுறித்து  தலைமை செயலாளர், வருமான வரித்துறை, விஜிலன்ஸ் துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

குட்கா ஊழல் குறித்த தகவல்களை சீலிட்ட கவரில் வரும் 10ந்தேதி தாக்கல் செய்யும்படியும், வரும 12ந்தேதி இதுகுறித்த விசாரணையின்போது குட்கா  ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்காவை திருட்டுத்தனமாக தமிழகத்தில்,  விற்பனை செய்ய தமிழக அமைச்சருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் சிலருக்கு ரூ 40 கோடி வரை லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியிருந்த தகவல் வெளியானது.

இந்த லஞ்ச வழக்கில், தற்போது டிஜிபியாக பதவி நீட்டிக்கப்பட்டிருக்கும் டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை கவர்னர் ஜார்ஜ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள் உள்பட அதிகாரிகள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.