மதுரை திமுக முன்னாள் எம் எல் ஏ வீடு முன்பு பட்டப்பகலில் குண்டு வெடிப்பு

துரை

திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி வீட்டின் முன்பு ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

திமுக முன்னாள்  சட்டப்பேரவை உறுப்பினரான வேலுச்சாமி  மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் செயலராக இருந்துள்ளார்.  தற்போது திமுக பொறுப்புக் குழு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.  இவருடைய வீடு மதுரை அண்ணா நகர் முதல் கிழக்கு குறுக்குத் தெருவில் உள்ளது.   நேற்று மதியம் இவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தார்

அப்போது சுமார் 2.30 மணிக்கு அவர் வீட்டு வாசலில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதால் அதிர்ந்து போன அனைவரும் வெளியில் வந்து பார்த்துள்ளனர்.   அப்போது கேட்டுக்கு வெளியே ஒரு வெடிகுண்டு வெடித்துச் சிதறிக் கிடந்தது.  அங்குக் குண்டுக்கான பேட்டரி, ஒயர்கள் மற்றும் வெடித்த துண்டுகள் காணப்பட்டன.   உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி உள்ளனர்.  அந்த விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தது தெரிய வந்துள்ளது.  சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.  இதுவரை இது குறித்து  யாரும் கைது செய்யப்படவில்லை.