மதுரை: மதுரை பகுதியைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி இளைஞருக்கு, தனது சொந்த பணத்தில் மொபட் வாங்கிக் கொடுத்து  உதவியுள்ளார் மதுரை கலெக்டர் அன்பழகன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம்  ஆனையூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான காளிமுத்து – மாரீஸ்வரி தம்பதியினரின் மகனான பழனிக்குமார் (வயது 21) , பிறவி ஊமையாக இருப்பதுடன்,  நடக்க முடியாமலும் உள்ளார்.  இந்த நிலையில், மாரீஸ்வரிக்கு  ரத்துப்புற்று நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் முன்புமாதிரி வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வறுமையில் வாடிய மாரிஸ்வரி,  தனக்கும் தனது மகனுக்கும் மருந்து மாத்திரை கூட வாங்க முடியாத நிலையில், நடக்க முடியாத மகனை, இடுப்பில் தூக்கிக்கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.   மனுவில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னால், 21 வயதான மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்ல முடியவில்லை எனவும் தனக்கு, அரசு  இருசக்கர வாகனம் அரசு வழங்கினால் பெரும் உதவியாக இருக்குமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனு குறிதது விசாரணை நடத்திய ஆட்சியர் அன்பழகன்,   தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் (டிவிஎஸ் மொபட்)  ஒன்றை வாங்கியதுடன், அதன் பின்சீட்டில் சீட் பெல்டுடன் பிரத்யேகமா சொகுசு இருக்கை அமைத்து, அதை அவர்களுக்கு வழங்கினார். முன்னதாக,   மாற்றுத்திறனாளியான  பழனிகுமாரை, மொபட்டின்  பின்சீட்டில் அமரவைத்து, அலுவலக வளாகத்தில் ஒரு ரவுன்ட் ஓட்டிக் பழனிகுமாரை உற்சாகப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியருக்கு மாரீஸ்வரியும் அவரது மகனும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.