மே22ந்தேதி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதலாண்டு நினைவு தினத்துக்கு நிபந்தனையுடன் 500பேர் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி!

மதுரை:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த மதுரை உயர்நீதி மன்றம் கிளை நிபந்தனையுடன் 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தது.

இதையடுத்து அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்று 500 பேர் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர். அவர்கள் இறந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி வரும் 22-ந்தேதி முதலாண்டு  நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கவே, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தத நீதிமன்றம்  நிபந்தனையுடன் 250 பேர் கலந்து கொள்ளலாம் என  உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில்,   தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கிளாஸ்டன், தமிழரசன் குடும்பத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் தனியாக நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கிளாஸ்டன் சகோதரி ஜான்ரோஸ் தாக்கல் செய்த மனுவில்,” துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓராண்டாகியும் அதன் வலியும், வேதனையும் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து அகலவி்ல்லை. இதனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் மே 22-ல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.  தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து எஸ்ஏவி பள்ளி மைதானம் வரை மாலை 6.30 முதல் 9.30 மணி வரை பேரணி நடத்த அல்லது விஇ ரோடு அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த நிலையில், முதலாண்டு  அஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: madurai hc, may22, memorial day, Tuticorin-shootout
-=-