பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை – தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

மதுரை: தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை அரசு தரப்பில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் சில மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அப்பொறுப்பை முதுநிலை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
சில ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பொறுப்பை மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர். ஆசிரியர் மற்றும் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் என பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணிமூப்பு (சீனியாரிட்டி) நிர்ணயிக்க வேண்டியுள்ளது. உபரி ஆசிரியர்கள் எந்தெந்த பள்ளிகளுக்கு செல்ல விரும்புகின்றனர் என்றும் கருத்தறிய வேண்டியுள்ளது. இதற்கு கால அவகாசம் தேவைப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர், “பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விபரத்தை அரசு தரப்பில் மார்ச் 19ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.