உயர்நீதி மன்றம் தடை எதிரொலி: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ரத்து

சென்னை:

நீட் தேர்வில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட தவறான வினா விவகாரம் தொடர்பான வழக்கில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டும், அதுவரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்கப்படுவதாகவும் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மருத்துவ கல்விக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெற இருந்தது.

இந்த கலந்தாய்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழக்ததில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைப்பெற்றது. நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.

அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பிய நிலையில், மீதமுள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

நிர்வாக ஒதுக்கீட்டில் 723 எம்.பி.பி.எஸ். இடங்களும், 645 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன. அவற்றை அரசு கலந்தாய்வின் மூலம் கடந்த ஆண்டு முதல் நிரப்பி வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் குளறுப்படி குறித்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை கலந்தாய்விற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இதையடுத்து 16-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.