மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள், ஊரின் முக்கிய பகுதிகள் போன்றவற்றில் திடீர் திடீரென சிலைகள் முளைப்பது வாடிக்கை. அதன்படி அரசியல் கட்சி தலைவர்கள், ஜாதிய அமைப்பின் தலைவர்கள் வைக்கப்படுவதும், அதை அகற்றப்போனால், அதிகாரிகளுடன் மல்லுக்கு நிற்பதும், இதுபோன்ற சிலைகள் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல்கள் ஏற்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருவதுண்டு.

இதன் காரணமாக,  அரசின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொதுஇடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற உத்தரவிட்டதுடன், தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் இணைந்து நடவடக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.