டிடிவி யை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு தடை!

மதுரை,

கொலை மிரட்டல் வழக்கில் டிடிவிதினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைதுசெய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டிடிவி தனியாக கட்சி நிர்வாகிகளை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த செந்தில், இபிஎஸ் அணியை சேர்ந்த  திருச்சி எம்.பி குமாரை கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து குமார் எம்.பி. கொடுத்த புகாரின் பேரில் திருச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, டிடிவி மற்றும் செந்தில் மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த புகாரின் பேரில் தங்களை கைது செய்துவிடுவார்கள் என எண்ணி, இருவர் சார்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிவி மற்றும் செந்திலை அக்டோபர் 4-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். அதுவரை அவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை செய்யும் தடை விதிப்பதாகவும் கூறி உள்ளார்.