கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

--

மதுரை:

கீழடியில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள கீழடியில் அகழ்வராய்ச்சி செய்து வந்தது, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, அகழ்வராய்ச்சி நடைபெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில் ஏற்கனவே, மத்திய தொல்லியல்துறை மற்றும் தமிழக அரசுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியது.

அதேபோல்,  தொல்லியல் துறை தரப்பிலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின் அருங்காட்சியகத்தில் பொருட்கள் வைக்கப்படும் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து கீழடியில் விரைவில்  தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

கீழடி அகழ்வராய்ச்சி – ஒரு பார்வை…

கீழடி கிராமம் மதுரைக்கு மிக அருகில் ராமநாத புரம் செல்லும் சாலையில் விரகனூரை அடுத்த சிலைமான் என்ற சிற்றூரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டது. ஊரின் எல்லையில் வைகை ஆறு ஓடுகிறது.

ஊரின் எல்லையில் உள்ள ஒரு தென்னந்தோப்பு ஒன்றில் தான் பண்டைய நகரத்தின் தொன்மைகள் கிடைத்துள்ளன.

அமர்நாத் ராமகிருஷ்ணா என்ற அகழ்வராய்சியாளர்  தனது குழுவை அழைத்துக் கொண்டுவந்து வைகை ஆற்றங்கரையில் மொத்தம் 293 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அப்போது, இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்த நகரம் கீழடியில் புதைந்திருப்பது தெரிய வந்தது.

வியந்து போன பாலசுப்பிரமணியன் நேரடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதுகிறார். கடிதம் கிடைத்ததும் மோடி விரைந்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார். தமிழக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதன் பிறகே தமிழக அரசு தனது கவனத்தைக் கீழடி மீது திருப்பியது. உரிய முறையில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆய்வுகள் துரித கதியில் இயங்கின.

2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முறைப்படி கள ஆய்வுகள் அமர்நாத் தலைமையில் நடைபெறத் தொடங்கின.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் புதைந்து போன நகர நாகரீகத்தைக் கண்டு பிடித்திருப்பது தமிழகத்தில் முதன்முறை என்று சொல்லலாம்.

மேலும் இது சமகால அகழ்வுகளின் தொடர்ச்சி என்ற அடையாளம் எதுவுமின்றி தனித்துக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. மாளிகைகளும், சரியான முறையில் கட்டமைக்கப்பட்ட வீதிகளும், சுகாதாரத்தை முன்னிறுத்தி கழிவுநீர் வாய்க்கால்களும் அமைத்து வாழ்ந்த ஓர் உன்னத நாகரீகத்தைப் பல இடங்களில் சங்க காலப் பாடல்கள் கூறுகின்றன.

வெறும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் வைத்து நமது பண்டைய நாகரீகத்தை வடிவமைத்த நமக்கு இந்த அகழ்வாய்வு மிக முக்கிய ஆதாரமாக இருக்கப் போவது உறுதி.

சிந்து சமவெளியில்தான் நகர வாழ்க்கை இருந்தது என்றில்லாமல் சங்க காலத்திலும் தமிழகத்தில் ஓர் உன்னத நாகரீகம் இருந்தது என்று தமிழர்கள் மார்தட்டிக் கூறிக் கொள்ள கீழடி ஆய்வுகள் நிச்சயமாக உதவும்.