நெட்டிசன்:

னது கனவில் மதுரை மீனாட்சி வந்ததாக முகநூலில் பதிவிட்டுள்ள தி.மு.க. பிரமுகர் எஸ். எஸ். சிவசங்கர் அவர்களது பதிவு:

மீனாட்சி அம்மன் என் கனவில் வந்தார். மதுரை ஆதினம் கனவில் சிவபெருமான் வரும் போது, என் கனவில் மீனாட்சி அம்மன் வரக் கூடாதா. “ஏன் எம் கோவில் எரிந்தது குறித்து எழுதவில்லை?”, என்று வினவினார் அம்மன்.

“அம்மையீர், கடந்த வாரம் முழுதும் கடும் பணி. மூன்று நாட்களாக நிலைத்தகவலே போடவில்லை. உங்களை புறக்கணிக்கும் எண்ணமெல்லாம் இல்லை”, என்றேன்.

“இது தான் சாக்கு என கோவிலை தனியாரிடம் ஒப்படைக்க சொல்லி சிலர் போராடினார்களே பார்த்தீர்களா”, என்று கேட்டார் அம்மன்.

” ஆமாம் அம்மா. தீயை அணைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் கோஷம் போட ஆரம்பித்து விட்டார்களே, அது தான் சந்தேகமாக இருக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தார்களா, காத்திருந்து கோஷமிட்டார்களா என்று”, என்றேன்.

“சரி. இந்து கோவில்கள் மாத்திரம் அறநிலையத்துறை துறை வசம் இருப்பது போல், சர்ச்களும், பள்ளிவாசல்களும் ஏன் அரசின் வசம் இல்லை என சிலர் எழுப்பும் கேள்விக்கு பதில் என்ன?”, என்று கேட்டார்.

” இதற்கு நான் பதில் சொல்வதை விட, உங்கள் பக்தரும், உங்கள் கோவில் இடம் பெற்றுள்ள மதுரையின் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.ஆர்.தியாகராஜன் அவர்களின் பதிலை தெரிவிக்கிறேன். ‘ராஜாங்கங்களும், சமஸ்தானமும் அரசுடமை ஆகியது போல், அரசர்கள் கட்டிய கோவில்கள் அரசு வசம் வந்துள்ளது. ஆதினங்களும், மடங்களும் இன்றும் சுயாதீனமாக இயங்குவது போல், தனியார்களால் உருவாக்கப்பட்ட சர்ச்களும், பள்ளிவாசல்களும் சுயாதீனமாக இயங்குகின்றன’, இது தான் பி.டி.ஆர் பதில்”, என்றேன்.

“அருமை. தக்க பதில் அளித்துள்ளார். அங்கிருந்த கடைகளால் தான் தீவிபத்து ஏற்பட்டது, அதனால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன சொல்கிறீர்கள்?”, என்று கேட்டார் அம்மன்.

” அப்படி கடைகளால் தான் தீவிபத்து என்றால் காலி செய்வது தவறு இல்லை. தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கடைக்கு முன் ஏற்றப்பட்ட சூடம் தான் தீவிபத்துக்கு காரணம். அப்படி எனில் சூடத்தை தடை செய்து விடலாமா? நேற்று மின்சார கசிவால் தங்கள் கோவில் அலுவலகத்தில், மீண்டும் சிறு தீவிபத்து நடந்துள்ளது. அதனால் கோவிலில் மின்சாரத்தை தடை செய்யலாமா?”, என்று கேட்டேன்.

“சபாஷ். சரியான கேள்வி. ஆனால் மின்சாரம் இல்லாமல் என்னால் இருக்க முடியாது மனிதனே. அந்த காலத்தில் விளக்கொளியில் இருந்தோம். இப்போது மின்சாரம் வந்த பிறகு, அந்த புகை ஒத்துக் கொள்ளவில்லை, கண் எரிகிறது. சில அற்பர்கள் பேசுவதை கேட்டு அந்த எண்ணம் எல்லாம் வேண்டாம்”, என்றார் அம்மன்.

” சரி, அதெல்லாம் போகட்டும். தனியார் வசம் கோவிலை ஒப்படைக்க நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா அம்மையீர் ?”, என்று நான் கேள்வி போட்டேன்.

” அய்யோ அந்த எண்ணம் வேண்டாம். காஞ்சி கோவிலில் தேவநாதன் செய்த ‘பூசையை’ நினைத்தால் பயமாக இருக்கிறது. அதே காஞ்சி கோவிலில் சங்கரராமனுக்கு ஏற்பட்ட ‘மோட்ச கதி’யை நினைத்தால் கெதக் என்றிருக்கிறது. தயை கூர்ந்து தனியார் வசம் கொடுக்கும் எண்ணமே வேண்டாம்”, என்று பதறினார் மீனாட்சி அம்மன்.

“ஆனாலும் பலே ஆட்களய்யா நீவீர். பெரியாரின் ஆட்களல்லவா, அது தான் என் வாயாலேயே உம் கட்சிக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்க வைக்கிறாய்”, என்று சிரித்தார் அம்மன்.

” அப்படி இல்லையம்மா. 1927லேயே நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதற்கு முன்பே இதற்கான கோரிக்கை எழுந்து விட்டது. எங்கள் தந்தை பெரியார், கடவுள் இல்லை என்று சொன்னாலும் ஒரு நாளும் கோவில்களை இடிக்கவில்லை, இடிக்க சொன்னதுமில்லை”, என்றேன்.

“அதை யாம் அறிவோம். சைவர் வைணவர்களை தாக்கியதும், வைணவர் சைவர்களை தாக்கியதும், இருவரும் சமணர்களையும், பௌத்தர்களையும் தாக்கியதையும் அறிவோம். அவர்களது வழிபாட்டு தலங்களை அழித்ததையும் அறிவோம். அழிவெல்லாம் ஆத்திக வெறியர்களால தான். ஒரு நாளும் நாத்திகர்கள் இந்த வேலை செய்வதில்லை. அறிவுப்படுத்தும் பணியே செய்கிறீர்கள். வாழ்க !”, என்றார் அம்மன்.

” சரி. அவர் கருத்தை சொன்னாய், எம் கருத்தை கேட்டாய். உம் கருத்து என்ன, கோவில் யார் வசம் இருப்பது ?”, என்று அம்மன் வினவினார்.

“அம்மையீர், கோவிலில் தீப்பற்றிய போது, மந்திரங்கள் தீயை அணைக்கவில்லை. அரசின் தீயணைப்பு இயந்திரங்களே அணைத்தன. எனவே அரசே பாதுகாப்பு”.

“அடுத்து, கோவில் அரசு வசம் இருக்கிறது, நீர் உள்ளே இருக்கிறீர் என்கிறார்கள். அப்படி நீர் இருந்தும், எம் மக்களை கர்ப்பகிரகத்திற்குள் வந்து உம்மை தொட அனுமதிப்பதில்லை. கோவிலை கட்டலாம், உம் சிலையை வடிக்கலாம். ஆனால் கோவில் உள் வந்து உம்மை தொடக் கூடாது. கோவிலே தனியார் வசம் சென்று விட்டால், உள்ளே கூட விடமாட்டார்கள். அதனால் கோவில் தனியார் வசம் செல்வதை அனுமதியோம். எங்கள் தலைவர் கலைஞர் சொன்னது தான் பொருத்தமாக இருக்கும். ‘கோவில் கூடாதென்பதல்ல, கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது”, என்று அழுத்தமாக சொன்னேன்.

” உம் கருத்துக்கு யாம் என்றும் ஆதரவு. வாழ்க !” , என்று தன் கழுத்திலிருந்த மாலையில் இருந்து பூவை பிய்த்து என் மீது தூவினார். “நன்றி அம்மையீர்”, என்று மகிழ்ந்தேன்.

“தூங்காதே தம்பி, தூங்காதே”, அலைபேசி ஒலிக்க கண் விழித்தேன்.

# மதுரை அரசாளும் மீனாட்சி, அரசே காக்கட்டும் கோவிலைத் தான் !