துரை

துரை நகர் செல்லூர் மீனாம்பாள்புர மக்கள் நாளை இரு ஆலமரத்தைக் காக்க ஒரு திருவிழா நடத்த உள்ளனர்.

மதுரை நகரில் உள்ள செல்லூரில் உள்ள மீனாம்பாள்புரம் என்னும் இடத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு 7 ஆலமரங்கள் இருந்தன. அங்கிருந்த குளக்கரையில் இருந்த இந்த மரங்களின் கீழ் அப்போதைய பல குழந்தைகள் தங்கள் தாத்தாக்களுடன் சென்று விளையாடி உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்த மரங்கள் அழிந்து தற்போது இரு ஆலமரங்கள் மட்டுமே உள்ளன.

இந்த பகுதியில் வசிப்போர் இந்த இரு ஆலமரங்களைக் காக்க முடிவு செய்துள்ளனர். அதனால் ஒரு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மரங்களைச் சுற்றி கட்டிட இடிபாடுகள் உள்ளிட்ட பல குப்பைகள் போடப்பட்டுள்ளன. திருவிழாவின் போது இந்த மரங்கள் இருக்கும் பகுதியைச் சுத்தம் செய்து மரங்களின் முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் அபுபக்கர் என்பவர், “மதுரை நகரில் பல வித மறங்கள் காணப்படும். ஆனால் ஆலமரம் இருக்கும் ஒரே பகுதி எங்கள் பகுதி மட்டுமே ஆகும். இந்தப் பகுதியில் இரு ஆலமரங்கள் உள்ளன. ஆலமரம் நமது தேசிய மரமாகும். எனவே இந்த திருவிழா மூலம் மக்களின் கவனத்தை இந்த மரங்களின் பாதுகாப்பை நோக்கி திருப்ப முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்/

இந்த பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பவர், “எனது சிறு வயதில் நாங்கள் ஓடியாடி விளையாடிய ஆலமரங்கள் தற்போது அழிந்து விட்டன. இப்போது இருக்கும் குழந்தைகள் விளையாட இரு மரங்கள் மட்டுமே உள்ளன. இந்த மர விழுதுகளில் அவர்கள் ஊஞ்சலாடுவதைக் காண்பதில் நாங்கள் மகிழ்கிறோம். இந்த மரங்களைப் பாதுகாக்க மதுரை மாநகராட்சிக்கு ஒரு மனு அளிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.