சென்னை:

கூவத்தூர் பண பேரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அவையில்  இருந்து வெளிநடப்பு செய்தனர் திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள்.

பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

எடப்பாடி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறி இருக்கிறது. இது பற்றி அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த பேட்டி கடந்த சில தினங்களாகவே ஆங்கில தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த பிரச்சனை குறித்து நாங்கள் பேச அனுமதி கேட்டால், அந்த பிரச்சனை கோர்ட்டில் இருக்கிறது. எனவே பேச அனுமதி தரமாட்டேன் என்று சபாநாயகர் கூறுகிறார்.

இந்த பண விவகாரம் தமிழக அரசியலில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று இந்த பிரச்சனையை கிளப்பியதற்காக எங்கள் அனைவரையும் வெளியேற்றினார்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து மாலை வரை ஒரு மண்டபத்தில் வைத்து விட்டார்கள்.

சட்டமன்ற விதிப்படி நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு பற்றிதான் கருத்து கூறக் கூடாது. ஆனால் இந்த வழக்கே இன்னும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

ஆனால் சபாநாயகர் அது பற்றி பேச அனுமதி தர மறுக்கிறார். இந்த பிரச்சனை தொடர்பான எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இதுவரை அதை சட்டமன்றத்தில் மறுக்கவில்லை.

இந்த தலைகுனிவான சம்பவத்துக்கு பொறுப்பேற்று இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த பிரச்சனையை பேச அனுமதித்தால் அந்த எம்.எல்.ஏ.க்கள் பதில் சொல்ல வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் மறுப்பு தெரிவித்தால் கூட அதை சபையில் பதிவு செய்யலாம். ஆனால் சபாநாயகர் அது பற்றி விவாதிக்கவே அனுமதி தர மறுக்கிறார். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழக சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களுக்கு தலை குனிவு ஏற்படுத்திய பிரச்சனை இது. எனவே மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் நாங்கள் இது பற்றி சட்டமன்றத்தில் கேட்காவிட்டால் மக்கள் எங்கள் மீது மக்கள் காரி உமிழ்வார்கள்.

எனவே இந்த பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று சொல்கிறோம். தொடர்ந்து அவர் அனுமதி மறுப்பதால் இன்று வெளி நடப்பு செய்திருக்கிறோம். தொடர்ந்து இந்த பிரச்சனையை சபையில் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், “தற்போது கவர்னர் சென்னையில் இல்லை. அவர் வந்ததும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மனு கொடுப்போம்” என்றார்.