மதுரை தோப்பூர் துணைக்கோள் நகரமாகிறது: வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
மதுரை:
எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை மாவட்டம் தோப்பூர் உச்சப்பட்டியில், துணைக்கோள் நகரம் அமைக்கும் மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் இருப்பதாக, வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஒரு மாதமாக மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வீட்டுவசதித்துறை கோரிக்கை விவாம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பு வைக்கப்பட்டது.
அதில், மதுரை மாநகரத்தின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள தோப்பூர்-உச்சப்பட்டியில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன.
மத்திய பூங்கா, வணிக வளாகம் மற்றும் கூட்ட அரங்கம் ஆகிய வசதிகளுடன் கூடிய தன்னிறைவு பெற்ற ஒரு நகரியமாக துணைக்கோள் நகரத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து நிலச்சீர்திருத்தும் திருத்த சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்ப்டடது.
நிலச்சீர்திருத்தும் (நில உச்சவரம்பு நிர்ணயம்) திருத்த சட்ட முன்வடிவை வருவாயத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தாக்கல் செய்து பேசினார்.
தொழில், வணிக நிறுவனங்களுக்கான நில உச்சவரம்பை 15 ஏக்கரில் இருந்து 20 ஏக்கராக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அதுபோல் கரும்பு கொள்முதல் விலை ஒழுங்குப்படுத்துதல் சட்ட முன்வடிவும் இன்று சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவால் தாக்கல் செய்யப்பட்டது.