சென்னை: கிடப்பில்  போடப்பட்ட மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதன் காரணமாக, அரைகுறையாக இருக்கும் இந்த திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரவாயல் – சென்னைத் துறைமுகம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகை யிலும், சரக்குகளை எளிதில் அனுப்பவும், ரூ.3,204 கோடி மதிப்பில், 20.565 கிலோ மீட்டா் தூரத்துக்கு விரைவுச் சாலை (நான்கு வழி) அமைக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  திட்டமிடப்பட்டது

அதன்படி,  இந்த சாலையானது,  சென்னையின் முக்கியப் பகுதிகளான சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய உள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டு, பெரிய பெரிய தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக கிடப்பில் போட்டப்பட்டது.

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு கூட்டத்தில், இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய வன உயிரியல் வாரியத்தின் அனுமதி பெற்றதையடுத்து, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணா் குழு தற்போது இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்க விரைவில் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளதாக,  சென்னைத் துறைமுகத்தில் ஆகஸ்டு 15ந்தேதி தேசிய கொடியேற்றி பேசிய  துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன்  கூறினார்.

இந்த திட்டம், முன்பு தனியாா் பங்களிப்புடன் நடைபெற்று வந்த நிலையில், இனிமேல்,  தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நேரடி நிதியின்கீழ் செயல்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.