டில்லி,

டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக தேவைகள் குறித்து விரிவான மனு கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய சாலை பணிகள் குறித்து  இன்று காலை மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். மதுரவாயல் பகுதியில் பறக்கும் சாலை அமையும் பாதை நேர் செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.  மத்திய அரசின்  முக்கிய அதிகாரிகள் அதைப் பார்வையிட்டு, மாற்றுப் பாதையில் பறக்கும் சாலை திட்டம்  விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும்.

மதுரை வெளிவட்ட சாலை திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 800 கி.மீ.சாலைகளை தேசிய சாலைகளாக தரம் உயர்த்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

கடந்த திமுக ஆட்சியின்போது, ரூ.1,530 கோடி மதிப்பிலான சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை யிலான 18.3 கி.மீ. நீளமுள்ள நான்குவழி பறக்கும் சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் எந்தவித போக்குவரத்து இடையூறின்றி சென்னை புறநகர் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நகரின் உள்புற போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தை சென்றடையலாம்.

ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, திமுக கொண்டு வந்த திட்டம் என்ற காழ்ப்புணர்சி காரணமாக   இத்திட்டத்தை முடக்கி வைத்தது.

தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மாற்றுபாதையில் செயல்படுத்த ஒப்புதல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் – துறைமுகம் பறக்கம் சாலை திட்டம் உயிர்பெற்றுள்ளது.