கொரோனா பாதிப்பின் உண்மை விபரங்களை மறைக்கும் மத்திய பிரதேச பாஜக அரசு!

போபால்: மத்திய பிரதேச மாநில பாஜக அரசு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், அதனால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த ஞாயிறன்று மட்டும், மாநில தலைநகர் போபாலில் 17 பேர், கொரோனா தொற்றால் மரணித்ததாக செய்திகள் தெரிவித்த நிலையில், வெறும் 2 பேர் மட்டுமே இறந்ததாக மாநில சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 547 என்பதாக காட்டப்பட்டது.

போபால் நகரிலுள்ள மாயான பொறுப்பாளர்களின் கணக்கீட்டின்படி, கொரோனா மரண எண்ணிக்கைகளை மாநில அரசு குறைத்துக் காட்டுவது தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், மாநில அரசின் சுகாதாரத் துறையிலிருந்தே, தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத சிலர் கூறுவது என்னவெனில், “பிற மாநிலங்கள், கோவிட்-19 இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தங்கள் மாநிலம் அத்தகைய பாதிப்புக்கு ஆளாகவில்லை என்பதாக காட்டிக்கொள்ளவே, அரசின் தரப்பில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையையும், மரணித்தோர் எண்ணிக்கையையும் குறைத்து காட்டுகின்றனர்.

ஆனால், பொதுமக்களுக்கு உண்மை தெரிவிக்கப்பட வ‍ேண்டும். அப்போதுதான், அவர்களிடம் சிறந்த முறையிலான கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்” என்றனர்.