ரோம்: இத்தாலியில் மாபியா கும்பல், குடியிருப்புவாசிகளுக்கு உணவை வினியோகிக்க தொடங்கி இருக்கிறது.

கொரோனாவின் கோர பசிக்கு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது இத்தாலி. அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நாட்டின் பொருளாதாரமும் கடுமையான சிக்கலில் இருக்கிறது.

இந் நிலையில், அந்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏழை குடும்பங்களுக்கு மாபியா கும்பல் உணவை வினியோகித்து வருகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவை விநியோகிப்பதன் மூலம் உள்ளூர் ஆதரவைப் பெறுகிறது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அவசரநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காம்பானியா, கலாப்ரியா, சிசிலி மற்றும் புக்லியா ஆகிய பகுதிகளில் இந்த நிகழ்வுகள் அதிகளவு காணப்படுகின்றன.

ஒரு மாதத்திற்கும் மேலாக, கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன என்று மாபியா கும்பல் பற்றி ஆராய்ந்து வரும் புலனாய்வாளரும், வழக்கறிஞருமான நிக்கோலா கிரட்டேரி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: மில்லியன் கணக்கான மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த வருமானமும்  இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்களுக்கு உதவ அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், மாபியாக்கள் உதவ ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் லூசியானா லாமோர்ஜி, மாபியாக்கள் அதிகரித்து வரும் வறுமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், மக்களை அவர்கள் அமைப்புக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்றார்.

அண்மைக் காலத்தில் நேபிள்ஸ் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மாபியா கும்பலுடன் தொடர்புடையவர்கள் உணவுப் பொட்டலங்களை வீடு, வீடாக விநியோகித்துக் கொண்டிருந்ததை அறிந்தனர். இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்த நீதிபதிகள், விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.