Random image

பாடகர் கிருஷ்ணா மகஸேசே விருதின் பின்னணியில் தி ஹிண்டு! :  எழுத்தாளர் ஜெயமோகன்

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, தி. மகசசே விருது அளிக்கப்படுகிறது. இதை விமர்சித்து எழுத்தாளர் ஜெயமோகன்  தனது வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:

பாடகர் கிருஷ்ணா -  எழுத்தாளர் ஜெயமோகன்
பாடகர் கிருஷ்ணா – எழுத்தாளர் ஜெயமோகன்

டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான பாடகர் அவர். அவரது எந்தக் கச்சேரியையும் இரண்டாம்முறை கேட்கமுடியாது. படித்துவைத்ததைப் பாடுவார், அதற்கு பாட்டுவாத்தியார்த்தனம் என்று பெயர். சஞ்சய் சுப்ரமணியம் அமர்ந்து எழுந்த நாற்கலியில் அமரும் தகுதிகூட இல்லாதவர்.

ஆனால் விருது அவரது ‘மனிதாபிமானச்’ செயல்பாடுகளுக்காக எனத்தெரிகிறது.என்ன மனிதாபிமானச் செயல்பாடுகள் என்று தேடினால் இந்து ஆங்கில நாளிதழில் எழுதிய ‘முற்போக்கு’ கட்டுரைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். குடிசைக்கு இசையை கொண்டு செல்ல முயன்றாராம். அது இதுவரை நிகழ்ந்ததில்லையா என்ன? அப்படி அதில் என்ன நீண்டகாலச் சாதனையை அவர் செய்திருக்கிறார்?

அவரது பங்களிப்பு என்பது எந்த ஆழமான புரிதலும் இல்லாமல், சூழலில் புழங்கும் பொதுவான மரபு எதிர்ப்புக் கருத்துக்களை , முற்போக்குக் கோஷங்களை, தட்டையான வேகத்துடன் கூச்சலிடும்  கட்டுரைகளை எழுதியதுதான். அவற்றைவிட பலமடங்கு மேலானவை ஞாநி எழுதும் தட்டையான கட்டுரைகள்.

பொதுவாகப் பிராமணர்கள் தங்கள் சுய அடையாளத்தை மறைக்கவோ, தாண்டவோ நாலடி கூடுதலாக எம்பிக்குதிப்பதுண்டு, அக்குளில் பிராமணியத்தை ரகசியமாக வைத்திருப்பவர்களின் சத்தம் மேலும் அதிகமாக இருக்கும். .டி.எம்.கிருஷ்ணா அதிகமாகச் சத்தம்போடுபவர் என்பதனால் எனக்கு அவர் மேல், அவரது  தி ஹிண்டு- அய்யங்காரிய பின்னணிமேல், எப்போதுமே சந்தேகம்தான். அவரைப்பற்றி அறிந்த ஒவ்வொன்றும் அந்த ஐயத்தை வலியுறுத்துவதாகவே இருந்தன.

தமிழின் பண்பாட்டியக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர் அவர். மிக எளியமுறையில்கூட தமிழக இலக்கியம், கலைமரபு பற்றிய அறிமுகமே இல்லாத ‘பெரியவீட்டுப்பிள்ளை’. பொத்தாம்பொதுவான ஒரு மொழியில் எது பொதுவெளியில் ‘அதிர்வு’களை உருவாக்குமோ அதைமட்டும் பேசும் காலி டப்பா.

ஆக, அவருடைய  “தி ஹிண்டு” பின்னணி மட்டுமே இவ்விருதுக்கான தகுதியை உருவாக்கியிருக்கிறது. இந்த விருது மட்டும் இல்லையென்றால் இந்தக்குறைகுடத்தைப்பற்றி என் தகுதிகொண்ட ஒருவர் பேசவே தேவையில்லை.

இது முழுக்கமுழுக்க பணமும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களுக்குள் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு வென்றெடுக்கும் கிரீடம். இவருக்கு இனி அந்த அசட்டுக்கட்டுரைகளுக்காக  ஞானபீடம் கிடைக்கலாம். நோபலுக்கே முட்டிப்பார்க்கும் அளவுக்கு அவருக்கு பணபலமும் ஊடகபலமும் இருக்கிறது

சமீபத்தில் மிகக்கூசிய ஒருதருணம் இது” – இவ்வாறு தனது வலைதளத்தில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.