இப்படியும் நடத்தலாம் திருமணக் கொண்டாட்டத்தை… பாடம் எடுத்த இளம் தம்பதியினர்..!

மும்பை: தங்களின் திருமணப் பரிசாக, ஒரு கிராமத்திலுள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் ஒரு தம்பதியினர்.

மராட்டிய மாநிலத்தில் இந்தப் பாராட்டத்தக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. 28 வயதுடைய எரிக் ஆன்டன் லோபோ மற்றும் 27 வயதுடைய மெர்லின் என்ற பெயர்கொண்ட தம்பதிகள்தான் அவர்கள். அம்மாநிலத்தின் சத்பலா என்ற கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு இந்த சிறப்புவாய்ந்த நன்கொடையை வழங்கியுள்ளனர் அத்தம்பதியினர்.

இவர்களுடைய திருமணத்தில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மொத்தம் 22 நபர்கள் மட்டுமே பங்கேற்றனர். “பொதுவாக, ஒரு கிறிஸ்தவ திருமணம் என்பது ஏறக்குறைய 2000 விருந்தினர்கள் கலந்துகொண்டு, நல்ல உணவு வகைகளுடன், திருமண ஒயினும் இடம்பெறுவதாகும். ஆனால், இந்த சூழலில் எதுவும் முடியவில்லை. எனவே, எங்களின் திருமண வைபவத்தை நாங்கள் வேறுவகையில் கொண்டாட முடிவு செய்தோம்” என்கிறார் மணமகன் லோபோ.

அத்தம்பதிகள் வாழக்கூடிய மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில், இதுவரை 1500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், அந்நோய்க்கு இதுவரை 90 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே, சத்பலா கிராமத்திலுள்ள மருத்துவமனைக்கு, கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், 50 படு‍க்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்க அவர்கள் முடிவுசெய்தனர்.