ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி: மராட்டிய முதல்வர் உத்தவ்!

மும்பை: மராட்டியத்தில் ரூ.2 லட்சம் வரையிலான வேளாண்மை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே.

இந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வரையில் பெறப்பட்ட விவசாயக் கடன்கள் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடன் தள்ளுபடி திட்டமானது, ‘மகாத்மா ஜோதிராவ் புலே’ கடன் தள்ளுபடி திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளதும் ஆச்சர்ய அலைகளை உருவாக்கியுள்ளது.

வேளாண்மைக் கடன் தள்ளுபடி என்ற ஒரு விஷயம், மராட்டிய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகித்தது.

அத்தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் இணைந்துப் போட்டியிட்ட சிவசேனா கட்சி, பின்னர் அதிகாரப் பகிர்வு பிரச்சினையில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. பின்னர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் பதவியைப் பெற்றது.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றங்களின் ஒரு பகுதியாக ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவசேனை தலைவரும் அம்மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே.

மேலும், இக்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு இந்துத்துவ எதிர்ப்புப் போராளியான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதும் கவனத்தைக் கவர்ந்துள்ளது.