மாநில நதிகளை இணைக்க மராட்டிய அரசு திட்டம்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

--

மும்பை: வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களை நோக்கி தண்ணீரை திருப்பிவிட, 4 நதிகளை இணைத்தல் மற்றும் 480 கி.மீ. நீளத்திற்கு சுரங்க நீர்வழிப்பாதை அமைத்தல் ஆகியவற்றை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டு வருவதாக மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தின்போது கொடியேற்றி ஆற்றிய உரையில் அவர் இதைக் கூறினார். 4 நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான கடன்களை அதிகரிக்கும் செயல்திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம் மாநிலத்திற்குள் இருக்கும் நதிகள் இணைக்கப்பட்டு, தேவையான தண்ணீரை மராத்வாடாவுக்கு திருப்பிவிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, உகாய் அணையிலிருந்து தாபி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கு 434 மில்லியன் மீட்டர் கியூப் தண்ணீரை திறந்துவிட குஜராத் அரசு மறுத்ததையடுத்து, நதிகள் இணைப்பு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது மராட்டிய அரசு.

இந்த இணைப்பு திட்டமானது, நார் – பார் – கிரானா, தமன்கங்கா – கோதாவரி, பார் – கோதாவரி மற்றும் தமன்கங்கா – வைத்தரனா போன்ற நதிகளை இணைத்து, மராத்வாடா மற்றும் வடக்கு மராட்டிய பகுதிகளுக்கு வறட்சி காலங்களில் தண்ணீரை திருப்பி விடமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.