திருநெல்வேலி சங்கிலி பூதத்தார் திருக்கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசை முழங்க, திருமுறை பாராயணம் செய்யப்பட்டது. பின்னர்,விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், வேதிகார்ச்சனை மூல மந்திர ஜபம், த்ரவ்யாஹுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர் காலை 6.30 மணிக்கு புதன் ஹோரையுடன் கூடிய சிம்ம லக்கனத்தில் ஸ்ரீசங்கிலி பூதத்தார் சமேத பேச்சியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அபிஷேகங்கள், விஷேச அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சுவாமியை தரிசித்தனர். பின்னர் காலை 10.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் தொடங்கி வைக்கப்பட்டது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு லலிதா ஸகஸ்ர நாம அர்ச்சனை, சோடஷ உபசார தீபாராதனை ஆகியவை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.