மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா – சிவசேனா வைத்த ‘பன்ச்’

மும்பை: மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவருக்கு தற்போது நிலைமையின் தீவிரம் புரிந்திருக்குமென கூறியுள்ளார் சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத்.

கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து, முதல்வர் உத்தவ் தாக்கரே, வீட்டை விட்டு வெளியிலேயே செல்வதில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்ததைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் சஞ்சய் ராவத்தின் கருத்து வெளியாகியுள்ளது.

“நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தோம். ஆனால், இப்போது அவர் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு இப்போது நிலைமையின் தீவிரம் புரிந்திருக்கும்.

மாநில சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான தேவேந்திர பட்னாவிஸுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்” என்றுள்ளார் சஞ்சய் ராவத்.

மும்பையில் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் தேவேந்திர பட்னாவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.