வெள்ளிக்கிழமை (08.04.2016),மகாராஸ்திர மகளிருக்கெல்லாம் இந்த “குதி-பட்வா” எனும் மராத்திய புத்தாண்டு, மறக்க முடியாத புத்தாண்டாக அமைந்துள்ளது.
shani temple 1
 
“மராத்தியப் பெரியார்” ஜோதிராவ் பூலே வின் மனைவி சாவித்திரி பூலே மராட்டியத்தில்  பெண்களுக்கான முதல் கல்விநிலையத்தை துவங்கியதில் இருந்து பெண் விடுதலைப் பயணம் முன்னோக்கி நகர்ந்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர், ஷனி  கோவிலுக்குள் நுழையும் உரிமைக்கோரும் போராட்டமாக உருப்பெற்றது.
savithtiri poole
பெண்ணியப் போராளிகளின் சளைக்காத தொடர் உரிமை மற்றும் சட்டப் போராட்டத்தின் விழைவாக இந்த ஷனி  கோவிலுக்குள் நுழையும் உரிமை தற்பொழுது நிலைநாட்டப் பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.
இதன் விவரம்:
மகாராஸ்திராவில் உள்ள அஹமதுநகரில் உள்ளது 400 ஆண்டுகள் பழமையான ஷனி ஷிங்க்னாபூர் கோவில். இந்தக் கோவிலில் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக கருதும் விரும்பத்தகாத பழக்கம் ஆண்டாண்டு காலமாய் பின்பற்றப் பட்டு வந்தது.
இந்த அநீதியை  எந்த இறைத்தூதரோ, அரசியல் நாயகனோ வந்து உடைக்க வில்லை. இதனை  நிகழ்த்திக் காட்டியவர்கள் சாட்சாத் பெண்களே.
ஆம்.
21 வயதான மாணவி பிரியங்கா ஜகதாப் மற்றும் ஓட்டுநர் பள்ளி நடத்தும் 31 வயதான புஷ்பக் கேவாத்கர் இன்று கோவிலின் கற்பக்கிரகத்திற்குள் நுழைந்து பாறையிலான ஷனி சிலைக்கு பூஜை செய்து வணங்கியதன் மூலம் கற்கால பழக்கவழக்கங்களை தூக்கி எறிந்துள்ளனர்.
சாவித்ரி பூலெ ஜிஜாபாய் அஹில்யானபாய்
நூற்றாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த தடையை நீக்கி விட்டு அங்கு பெண்களையும் அனுமதிக்குமாறு பெண் உரிமை ஆர்வலர், திருப்தி தேசாய் நடத்தி வரும் பூமாதா என்ற பெண்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நீதிமன்றம்  வழக்கு விசாரணையின் போது கருவறைக்கு  பெண்கள் செல்லலாமா என்ற  விவாதத்தின் போது ”கோவில் கருவறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஒருவேளை, கருவறையில் ஆண்களை அனுமதித்து, பெண்களுக்கு தடை விதித்தால், அப்போது, ஹிந்து வழிபாட்டு தலங்கள் நுழைவுஅனுமதிச் சட்டம் பிரயோகிக்கப்படும்,” என, அட்வகேட் ஜெனரல், ஐகோர்ட்டில் தெரிவித்திருந்தார்.
வருடத்திற்கு மூன்று முறை கருவறைக்குள்  ஆண்கள் இதுவரை அனுமதிக்கப் பட்டு வந்தனர். கோர்ட்டின் ஆணையை மீறும் செயலாகிவிடக் கூடாது என  இன்று பெண்களுக்கும் அந்த வாய்ப்பு கோவில் தேவஸ்தானம் அளித்தது.
ராஜமாதா ஜிஜா பாய், சாவித்திரி பூலே, அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்த மராத்திய மண்ணில் இந்தப் பெண்கள் எட்டியுள்ள உரிமை கண்டிப்பாக ஒரு மைல் கல் ஆகும்.
எனவே பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் இந்த மராத்தியப்  புத்தாண்டு, பெண்கள் உட்பட எல்லோர் வாழ்விலும் வசந்தத்தை ஏற்படுத்த பத்திரிக்கை.காம் வாழ்த்துகின்றது.
தொடர்புடையப் பதிவு:

  1. சனிக் கோவில் நுழையும் போராட்டம்
  2. பெண்களுக்கு அனுமதி மறுக்கும் அவலம்
  3. பெண்களுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு

பெண்களுக்கு கோவிலில் நுழைய அனுமதிப்பது குறித்த கருத்து என்ன?  comment பதியவும் !