பெங்களூரு,

கதாயி நதி நீர்  பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் எடியூரப்பா கர்நாடக விவசாயிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டார் என்று  கர்நாடக முதல்வர் சித்தராமையா காட்டமாக கூறினார்.

கர்நாடகம், கோவா மற்றும் மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களுக்கு இடையேயான மகதாயி நதிநீர் பிரச்சினை வெகு காலமாக நீடித்து வருகிறது. அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால், பாஜகவினர் மகதாயி பிரச்சினையை கையில் எடுத்து பேசி வருகின்றனர்.

சமீபத்தில் மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, மகதாயி பிரச்சினையில் கோவா மாநில பாஜ முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மகதாயி பிரச்சினை குறித்து பேச எடியூரப்பா யார் என கேள்வி விடுத்திருந்தார்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் முதல்வர் சித்தராமையா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து வருகிறார். அப்போது காங்கிரஸ் அரசின் சாதனைகளை தொகுத்து பேசி வருகிறார்.

அதன்படி  துமகூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த சித்தராமையா  சிரா என்ற நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“மகதாயி நதிநீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு கர்நாடக அரசு தயாராக உள்ளது. மந்திரிகள், விவசாயிகள், எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமரிடம் அழைத்து செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்.

பிரதமர் உடனே தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

எடியூரப்பா கடந்த 15-ந் தேதி விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியை கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவர் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார்.  இனிப்பான செய்திக்கு பதிலாக எடியூரப்பா விவசாயிகளுக்கு விஷம் கொடுத்துவிட்டார்.

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் எடியூரப்பா ஆகிய 2 பேரும் சேர்ந்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இதை கோவா நீர்ப்பாசனத்துறை மந்திரியே கூறி இருக்கிறார். பேச்சுவார்த்தைக்கு நானே வருகிறேன் என்று சொன்னேன். தேர்தலுக்கு பிறகு வாருங்கள் என்று அவர் கூறினார்.

இது அரசியல் சதி. இந்த இருவரின் நாடகத்தால் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர்.  இது வெட்கக்கேடா னது. வாக்குறுதி கொடுத்துவிட்டு, விவசாயிகளிடம் எடியூரப்பா சிக்கிக் கொண்டுள்ளார். இதை திசை திருப்ப அவர் முயற்சி செய்கிறார். பிரச்சினையை தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

இவ்வாறு சித்தராமையா கூறினார்.