நாளை: புரட்டாசி ‘மகாளய அமாவாசை!’ கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு

வ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர்.

இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். 

‘மகாளயம்’ என்றால் பெரிய கூட்டம் என்றும் பொருள்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் மறைந்த நம் முன்னோர்கள்  மொத்தமாக நம் இல்லத்தில் கூடுவதாக ஐதீகம்.

‘மகாளய பட்சம்’ என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.  பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

1mahal2

மகாளய பட்சம் எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். அதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை – அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான இரு வார காலம் (14 நாட்கள்) இந்த மகாளய பட்சம் ஆகும். இந்த மாதம் முழுவதும் முன்னோர்களுக்கு உரியதாக கருதப்படுகிறது.

இந்த காலக்கட்டங்களில் நமது முன்னோர்களை துதித்து திதி கொடுக்கப்படுவது வழக்கம். இதை சிரார்த்தம் என்றும் கூறுவார்கள்.

மறைந்த முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ திதி கொடுக்க மறந்து விட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பை தவறி விட்டலோ, அவர்கள்  இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனைம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாகவே இந்துக்கள் மத்தியில்,. மகாளய அமாவாசை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம் நமது  முன்னோர்கள் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

‘நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது. அத்துடன் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.

இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது.

மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

மகாளய ஆமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமாக நம் முன்னோர்கள் வகுத்திருப்பது… கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், ராமர் தர்பணம் செய்த ராம்காட், பம்பை நதிக்கரை உள்பட  நதிக்கரைகள், ஆற்றங்கரையோரம்  மற்றும் குளங்கள் போன்றவை ஆகும்.

அங்கு செல்ல இயலாதவர்கள்  கோயிலில்  வைக்கபட்ட கங்கா தேவியை ஆவாகம் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்யலாம்.

மகாளய அமாவாசையில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள்.

அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.

மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம்.