மகாராஷ்டிரா மாநில காவல்துறையில் கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 140 காவலர்களுக்கு கொரோனா…

--

மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிதீவிரமடைந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவலில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது. அங்கு கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 140 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில்  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1லட்சத்து 24 ஆயிரத்து  331 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 55ஆயிரத்து 665 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 62ஆயிரத்து 773 பேர் குணமடைந்து உள்ளதாகவும், பலி எண்ணிக்கை 589 ஆக அதிகரித்து உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 140 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதுதெரிய வந்துள்ளது. மேலும் ஒருவர் பலியாகி உள்ளதாகவும் மாநில காவல்துறை தெரிவித்து உள்ளது.

மக்கள் தொகை நெருக்கமுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில், கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறை யினருடன் இணைந்து காவல்துறையினரும் தீவிரப்பணியாற்றி வருகின்றனர்.   அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் 3,960 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,925 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், பலி எண்ணிக்கை 46 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் மாநிலத்தில் ஊரடங்கை மீறுவோர் தொடர்பாக அங்கு 27,236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 83,482 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 8,23,40,331 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என மாநில காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.