மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அனுமதி…!

--

மும்பை: மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வரும் மகாராஷ்டிராவில் மெட்ரோ ரயில் சேவையை மீண்டும் துவங்க அம்மாநில அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதன் மூலம், நாளை முதல் படிப்படியாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்.

கொரோனா முன் எச்சரிக்கை விதிகளுடன் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், அரசு, தனியார் நூலகங்களை நாளை முதல்  திறக்கவும்  அனுமதி தரப்பட்டுள்ளது. வாரச்சந்தைகள் செயல்படவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.