மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில், பாஜக, சிவசேனா கூட்டணி இடையே ஒற்றுமை இல்லாத நிலையில், சிவசேனா எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி வருகிறது என்று சிவசேனா புகார் கூறி உள்ளது. இதன் காரணமாக அங்கும் கூவத்தூர் சம்பவம் நடைபெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

கடந்த மாதம் 21ந்தேதி நடைபெற்று முடிந்த மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவசேனாவின் 50க்கு 50 என்ற அதிகாரப்பகிர்வு கோரிக்கை மற்றும் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, இரு கட்சிகளுக்கு இடையே  ஆட்சி அமைப்பபதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆட்சிக்காலம் வரும் 8ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், புதிய ஆட்சி அமைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த சுயேச்சை எம்எல்ஏ ஒருவர், சிவசேனா எம்எல்ஏக்கள் பாதிபேர் கட்சியை உடைத்து விட்டு, பாஜகவில் சேர்ந்து விடுவார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சிவசேனாவும், பாஜக, எங்கள் கட்சி எம்எல்ஏக்களை வேட்டையாடுகிறது என்று பகிரங்கமாக புகார் கூறி உள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் தலையங்கத்தில், மகாராஷ்டிரா மக்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் ஆனால் அரசாங்கம் அமைப்பதில் உள்ள முட்டுக்கட்டைகளை உடைக்க பாஜக பண சக்தியை பயன்படுத்துவதாக எழுதி உள்ளது.

மேலும்,  “சிலர் புதிய சிவசேனா எம்எல்ஏக்களை பண சக்தியுடன் வெல்ல முயற்சிக்கின்றனர். இது போன்ற புகார்கள் அதிகரித்து வருகின்றது. இது போன்ற மதிப்பு இல்லாத அரசியலை சிவசேனா அனுமதிக்காது”.

“முந்தைய அரசு (பாஜக அரசு) பண அதிகாரத்துடன் புதிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் யாரும் விவசாயிகளுக்கு உதவவில்லை, எனவே விவசாயிகள் ஒரு சிவசேனாவைச் சேர்ந்தவரை முதல்வராக்க விரும்புகிறார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிவசேனா குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாள சச்சின் சாவந்த், “சிவசேனா பாஜகவின் கூட்டணி பங்காளியாகும். அந்த கட்சியோ தங்கள் எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாவதாக பயப்படுகிறது என்றால் எந்த அளவுக்கு தார்மீக ரீதியாக பாஜக ஊழல் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். நாம் அவர்களிடம் இருந்து மகாராஷ்டிராவை காப்பாற்ற வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான தார்மீக உரிமை உள்ளதா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கிடையில்  “பாஜகவின் சுதிர் முங்கதிவார், மகாராஷ்டிராவின் கவுரவத்தை அழிக்க யாரும் நினைக்கக் கூடாது. சிவசேனா மகாராஷ்டிராவின் கவுரவத்தை காக்கும் வாள்களாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.