மும்பை:

ராகுல் காந்தியின் பொறுப்பற்ற பேச்சுகள் தொடர்ந்தால், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி வாக்குகள் அதிகரிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிர சட்டசபைக்கு வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அம் மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதி களில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் 145 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 123 இடங்களிலும் களம் காண்கின்றன.

வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அம்மாநிலத்தில் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

இந் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டம், புசாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ராகுல் காந்திக்கு,மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் இல்லை. காரணம் அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் பேசிய சில பேச்சுகள் தான். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர் பேசியிருந்தார். அதன் பிறகு கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிவிட்டார்.  தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கூட பழைய கதைகளே பேசி வருகிறார். அவர் தொடர்ந்து இதே போல பேசி வந்தால், மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் மேலும் அதிகரிக்கும்.

2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 42 தொகுதிகளில் தான் வெற்றி கிடைத்தது. அவர்களுக்கு இந்த முறையும் 24 இடங்களுக்கு மேல் வெல்ல முடியாது என்பது தெரியும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான் சரத்பவாரையும், பட்னவிஸ் சரமாரியாக சாடினார். கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டிய நிதி, இடைத்தரகர்களுக்கு சென்றது. ஆனால் இப்போது பாஜக ஆட்சியில் அப்படி அல்ல, அனைத்தும் அவர்களின் வங்கி கணக்குக்கே சென்றுவிடுகிறது என்றார்.