முதன்முதல் அறிவிப்பு: காஷ்மீரில் நிலம் வாங்கும் மகாராஷ்டிரா மாநில அரசு!

மும்பை:

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகள் 370, மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், அங்கு நிலம் வாங்க பல மாநிலங்கள் உள்பட பிரபல நிறுவனங்களும் ஆசைப்படுகின்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு, அரசு சார்பில் ரிசார்ட் கட்ட முதன்முதலாக 2 இடங்களில் நிலங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த அரசியல் சாசனம் சட்டம் 370ன் படி, மற்ற மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், காஷ்மீரில் சொத்துகளை வாங்க முடியாது. ஆனால், மற்ற மாநிலங்களில் காஷ்மீர் மக்கள் சொத்துகளை வாங்கலாம்.

அதுபோல, ஷரத்து  35ஏ பிரிவின் மூலம், ஜம்மு காஷ்மீரில் அந்த மாநில மக்களால் மட்டுமே அசையா சொத்துகளை வாங்க முடியும். வெளிமாநிலத்தவர் எவருக்கும் எந்த நில உரிமை யும் கிடையாது. 10 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொத்து வாங்கும் உரிமை உண்டு.

இந்த ஷரத்துக்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு சொத்துக்களை வாங்கிக் குவிக்க பிரபல நிறுவனங்கள் போட்டிப்போடுகின்றன.

ஏற்கனேவே முகேஷ்அம்பானி, தனது ரிலையன்ஸ் நிறுவனத்தை அங்கு தொடங்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது முதன்முதலாக மகாராஷ்டிர மாநில அரசு நிலம் வாங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி,  காஷ்மீர் மற்றும் லடாக்கில் நிலம் வாங்க உள்ளதாகவும், அங்கு தலா ரூ.1 கோடி செலவில் இரண்டு ரிசார்ட்டுகளை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான இடங்கள் பஹல்காம் (ஜே & கே) மற்றும் லே (லடாக்) ஆகிய இடங்களில் வாங்க முடிவு செய்துள்ளதாகவும்,  அடுத்த 15 நாட்களுக்குள் நிலங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் செல்வார்கள் என்றும் அறிவித்து உள்ளது.

அதுபோல, காஷ்மீரில் நிலம் வாங்கி வீடு கட்டுவேன் என்று கோவா மாநில அமைச்சர் மைக்கேல் லோபோவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் நிலங்களை வாங்க பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முயன்று வரும் நிலையில், காஷ்மீரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தவும்  மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.