மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையான “புராஜெக்ட் பிளாட்டினா”வை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளது என்று நியூஸ் 18 தெரிவித்துள்ளது. “உலகின் மிகப்பெரியது” என்று கூறப்படும் இந்த சோதனை ஜூன் 29 மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .16.65 கோடியை அனுமதித்துள்ளார்.

 
COVID-19-க்கு வேறு சிகிச்சை முறைகள் இல்லாத நிலையில், கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாச நோய்க்கு, இன்னும் பரிசோதனையில் இருந்தாலும், திறன்மிக்க பிளாஸ்மா சிகிச்சை, தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி மற்றும் மருந்துகள் துறையின் கீழ் உள்ள 17 மருத்துவக் கல்லூரிகள், மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நான்கு பி.எம்.சி மருத்துவக் கல்லூரிகள் உட்பட இருபத்தொரு மையங்கள் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், இந்த திட்டம் 13 மையங்களில் தொடங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு COVID-19 நோயிடமிருந்து குணமான நோயாளியிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை இரண்டு டோஸ்கள் செலுத்துவார்கள். பொதுவாக ஒருவரிடமிருந்து 200 மில்லி லிட்டர் அளவுக்கு  பிளாஸ்மா பெறப்படும். பொதுவாக கொரோனாவில் இருந்து குணமான ஒருவரின் இரத்தத்தில் வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும். எனவே, இரத்தத்தின் திரவப்பகுதியான பிளாஸ்மாவை பாதிப்புடைய ஒருவருக்குச் செலுத்தும்போது அது வைரஸை எதிர்த்து போராடி அழிக்கும் என்று இந்த சிகிச்சை பற்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் இந்த  சிகிச்சையானது இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த சோதனைகளுக்குத் தேவையான பிளாஸ்மாவை வழங்க போதுமான இரத்த தானம் செய்பவர்கள் இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

“புராஜெக்ட் பிளாட்டினா”  உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா சிகிச்சை சோதனையாக இருக்கும். எனவே COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் திறன்மிக்க பிளாஸ்மாவின் பங்கு குறித்து வலுவான டேட்டாவை வழங்கும்” என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த திட்டத்திற்காக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .16.65 கோடியை ஒதுக்கி அனுமதித்துள்ளார். மீண்டு வரட்டும் மகாராஷ்டிரா!
தமிழில்: லயா