மும்பை: நில முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு உள்ளான மகாராஷ்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நிழல் உலக பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் செல்போனிலிருந்து, அமைச்சர் கட்சே போனுக்கு அழை்பு வந்ததாக ஆம் ஆத்மியை சேர்ந்த போன் ஹேக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார். இதேபோல, அரசு நிலத்தை குறைந்த விலைக்கு மனைவி மற்றும் மருமகன் வாங்க துணை போனதாகவும் கட்சே மீது புகார் எழுந்தது.
04-1465030684-eknath-hadse-600
முறைகேடு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக நீடிக்க செய்ய பாஜக மேலிடம் விரும்பவில்லை. உடனடியாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசை டெல்லிக்கு அழைத்து, கட்சேவை ராஜினாமா செய்ய உத்தரவிடுமாறு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
மும்பை திரும்பிய பட்னாவிசை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த கட்சே, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாகவும், அதை முதல்வர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.