ரபேல் போர் விமான ஊழல்: பதவியை ராஜினாமா செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.

பேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டி மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா மணடலத்துக்குட்பட்ட கடால் தொகுதி  எம்.எல்.ஏ. ஆஷிஷ் தேஷ்முக்.  இவர் செவ்வாய்க் கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் இன்று அவர் தனது ராஜினாமா கடிதத்தை மராட்டிய சபாநாயாகரிடம் அளித்தார்.  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர்,  மத்திய அரசின் மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் மகாராஷ்டிர மாநிலம் அரசின் மேக்னடிக் மகாராஷ்டிரா திட்டங்களால் இதுவரை எந்தப் பலனும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மத்திய பா.ஜ.க. அரசின் மீது ஊழல் குற்றம் சாட்டி, அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.