மகாராஷ்டிராவில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில கல்வித்துறை தேதிகள் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  ஏப்ரல் 23ம் தேதி தொடங்கி மே 21ம் தேதியில் நிறைவு பெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. மத்திய அரசின் தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்கள் படிப்படியாக பள்ளிகள் திறப்பை அறிவித்தன. அந்தவகையில், மகாராஷ்டிராவிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், 10, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 12ம் வகுப்புக்கு ஏப்ரல் 23ம் தேதி தொடங்குகிறது. பின்னர் மே 21ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.

10ம் வகுப்புக்கு ஏப்ரல் 29 முதல் மே 20 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில இடைநிலை மற்றும் உயர் நிலை வாரிய செயலாளர் அசோக் போசலே கூறியுள்ளார்.

பொதுத்தேர்வுகளானது அம்மாநிலத்தில் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்படும். ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக அட்டவணை மாற்றப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.