மும்பை:

காராஷ்டிரா மாநில அமைச்சரவை வரும் 30ந்தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், துணைமுதல்வராக அஜித்பவார் மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை இல்லாத நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் அஜித்பவார் பாஜக இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, பாஜக அரசு பதவி ஏற்றது. மாநில முதல்வராக பட்னாவிசும், துணைமுதல்வராக அஜித்பவாரும்  பதவி ஏற்றனர்.

இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க மறுத்த நிலையில், அஜித்பவாரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து அஜித்பவாரின் ஆதரவாளர்களை, தன் பக்கம் இழுத்தார். இதனால், பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டு, முதல்வரும், துணைமுதல்வரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்து, தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

இந்த நிலையில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையுடன் கூட்டணி அரசு, ஆட்சி அமைத்தது, மாநில முதல்வராக உத்தவ் தாக்கரேவும்,  சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், என்சிபியின் ஜெயந்த் பாட்டில், சஹான் புஜ்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாலாசாகிப் தோரட், நிதின் ராவத் உள்ளிட்ட 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

அதன்பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் ஒரு மாத இழுபறிக்கு பின்னர், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக,   கூட்டணி கட்சிகள் இடையே ஆலோசனை முடிவடைந்து உள்ளதாகவும்,  அதன்படி, அமைச்சரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி உள்பட 15 இடங்களும், சிவசேனா கட்சிக்கு 15 இடங்களும்,  காங்கிரஸ் கட்சிக்கு 13 இடங்களும் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் தவிர, தேவையான அமைச்சர்கள் குறித்த அமைச்சரவை பட்டியல் தயாராகி உள்ளதாகவும், அதன்படி, முன்னாள் துணைமுதல்வர் அஜித்பவாருக்கு துணைமுதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து, அஜித் பவார், ஜிதேந்திர அவாத், த்ரம்ராவ் பாபா அட்ரம், நவாப் மாலிக், தனஞ்சய் முண்டே, பாரத் பால்கே மற்றும் ஹசன் முஷ்ரிப் ஆகியோர்  அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபோல, சிவசேனா எம்எல்ஏக்கள் ராம்தாஸ் கதம், அனிம் பராப், நீலம் பராப் வைகர், சுனில் பிரபு, அப்துல் சத்தார், பாஸ்கர் ஜாதவ், தீபக் கேசர்கர் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில்,  அசோக் சவான், பிருத்விராஜ் சவான், விஜய் வெட்டிவார், வர்ஷா கெய்க்வாட், யஷோமதி தாக்கூர், சுனில் கேதார், சதேஜ் பாட்டீல், அமித் தேஷ்முக், கே சி பட்வி மற்றும் விஸ்வஜீத் கதம்  ஆகியோர் இணைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.