மும்பை

ந்த நேரத்திலும் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி கொள்ள தாம் தயாராக இருப்பதாக மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

மராட்டிய மாநில பாஜக அரசுக்கு 2014ல் அரசு அமைக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி சிவசேனா மிரட்டல் விடுத்து வருகிறது.  தற்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு மாநிலத்தில் போராடி வருகிறார்கள்.  அதற்கு முதல்வர் ஒத்துக்கொள்ளவில்லை.  இதையொட்டி சேனாவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரௌத் பாஜக அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் தங்களின் ஆதரவை திரும்பப் பெறுவோம் எனவும், அநேகமாக வரும் ஜூலை மாதம் இந்த அரசு கவிழும் எனவும் கூறியுள்ளார்.

நேற்று அலுவலகப் பயணமாக டில்லி செல்லும் போது விமான நிலையத்தில் முதல்வர் தேவேந்திரா நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

”சிலர் தங்களது ஆதரவை திரும்பப் பெற்று எங்கள் அரசை கவிழ்ப்பதாக மிரட்டி வருகின்றனர்.  அப்படி நடந்தால் இடைத்தேர்தலுக்கு எங்கள் கட்சி தயாராக உள்ளது.  இது போல வீண் மிரட்டல்கள் தேவையற்றது.   இடைத்தேர்தல் நடந்தால் எங்கள் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே.   ஏற்கனவே நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளதை மிரட்டல் பேர்வழிகள் கவனிக்க வேண்டும்.  எங்கள் வெற்றி அப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது”

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

ஆனால் பாஜக மேலிடத்துக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்துவதில் விருப்பம் இல்லை என தெரிகிறது.  2019 வரை தேர்தல் வருவதை விரும்பவில்லை, தவிர தற்போது வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சிவசேனாவின் ஆதரவை எதிர்பார்க்கிறது தெரிந்ததே.   இந்த வேளையில் தேவையற்ற விரோதத்தை மேலிடம் தவிர்க்க நினைக்கிறது