மும்பை: மகாராஷ்டிரா அரசு மீது அவதூறு ஏற்படுத்த சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துவிட்டது. இந் நிலையில், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, எனது குடும்பம், எனது பொறுப்பு என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறி உள்ளதாவது:

தொற்றுநோயைச் சமாளிக்க தனது அரசாங்கம் திறமையான பணிகளைச் செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை, மக்கள் பங்கேற்பு மற்றும் ஆதரவுடன் மட்டுமே வெல்ல முடியும் என்றும், தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: எனது குடும்பம், எனது பொறுப்பு என்ற பிரச்சாரத்தின் கீழ், ஒரு குழு மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது இரண்டு முறையாவது வருகை தருவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்.

இந்த முயற்சியில் எங்களுக்கு உதவ அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் நான் அழைக்கிறேன். டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். அதுவரை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களின் மருத்துவமனைகளின் திறனை அதிகரித்து வருகிறோம் என்றார்.