கொரோனா பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும்! பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மும்பை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அதை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என  பிரதமர் மோடிக்கு, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளார்.

 உத்தவ் தாக்கரே

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது.  நாளுக்கு நாள்  அதிகரித்துவரும் பெரும்தொற்று காரணமாக,  பல மாநிலங்களில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  நேற்று ஒரே நாளில் (14ந்தேதி) 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 15 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, , கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5,476 கோடியை உத்தவ் தாக்கரே அரசு ஒதுக்கியுள்ளது.

இநத் நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நிலநடுக்கம், அதிகனமழை, வெள்ளம் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நிதியுதவிகள் வழங்கப்படும் வழக்கம். அதுபோல, கொரோனா பெருந்தொற்று பரவலையும் இயற்கை பேரிடராக அறிவித்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயற்கை பேரிடர் சமயங்களில் வழங்கப்படும் தனிப்பட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்  என தெரிவித்துள்ளார்.