பாதுகாப்பு எல்லையை தாண்டியதற்கு மன்னிப்பு கோரிய முதல்வர் மனைவி

மும்பை

செல்ஃபி எடுப்பதற்காக உல்லாசக் கப்பலின் பாதுகாப்பு எல்லையை தாண்டி சென்றதற்கு மகாராஷ்டிர முதல்வர் மனைவி மன்னிப்பு கோரி உள்ளார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு பயணிகள் உல்லாசக் கப்பலை கடந்த வாரம் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொடி அசைத்து துவங்கி வைத்தனர். ஆங்கிரியா என பெயரிடப்பட்ட இந்த கப்பலின் முதல் பயணத்தில் மகாராஷ்டிர முதல்வர் மனைவி அம்ருதா ஃபட்நாவிஸ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் கப்பலின் விளிம்புக்கு பாதுகாப்பு எல்லையை தாண்டிச் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். பாதுகாவலர்கள் எச்சரித்தும் அதை கண்டுக் கொள்ளாமல் செல்ஃபி எடுத்த அம்ருதாவின் வீடியோ சமுக வலைதளங்களில் வைரல் ஆகியது.

அதை தொடர்ந்து உல்லாசக் கப்பலின் பாதுகாப்பு எல்லையை மீறிய அம்ருதா மீது விசாரணை நடத்த வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர் இந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பியது. தற்போது முதல்வர் மனைவி இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

முதல்வர் மனைவி அம்ருதா, “நான் அங்கு கடல் காற்றை அனுபவிக்க சென்றேன். நான் அமர்ந்திருந்த இடம் அபாயகரமானது இல்லை. அதற்கு கீழும் இரு படிகள் இருந்தன. எதுவாகினும் நான் பாதுகாப்பு எல்லையை தாண்டிச் சென்றது தவறுதான். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.