மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1 லட்சத்தைத் தாண்டி விட்டது.

இந்தியாவில் நேற்று வரை 3,09,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் 8890 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  மொத்தம் 1,54,231 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது 1,46,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இதில் மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.   நாட்டில் உள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளனர்.

இங்கு நேற்று ஒரே நாளில் 3493 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1,01,141 ஆகி உள்ளது.  இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேல் பாதிப்பு உள்ள ஒரே மாநிலம் மகாராஷ்டிரா என்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.  இங்கு நேற்று 127 பேர் உயிரிழந்து மொத்தம் 3717 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 47,796 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மும்பையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.   இல்லையெனில் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்.

இன்னும் கொரோனா நம்மை மிரட்டி வருகிறது.  பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. உடற்பயிற்சி செய்ய அனுமதி அளித்தது மக்கள் நலனுக்காகத்தானே தவிர் மக்கள் தங்கள் உடல்நலனை அவர்களே கெடுத்துக் கொள்வதற்காக அல்ல.   இதை மனதில் கொண்டு மக்கள் நடக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.