மும்பை

காராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் ஆட்சி அமையாமல் உள்ளது.  பாஜக – சிவசேனா கட்சிகள் பெரும்பான்மை பெற்ற போதிலும் முதல்வர்  பதவி பங்கீடு தகராற்றினால் சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது.  அத்துடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முன் வந்தது.

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற மிக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிருத்விராஜ் சவான், ‘‘விரைவில் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத.காங்கிரஸ் கூட்டணி நிலையான அரசை அமைக்கும்’’ என்று கூறியிருந்தார்.   அத்துடன்  மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் பிருத்விராஜ் சவான் குறிப்பிட்டார். இதற்கிடையே, நேற்று மாலை மும்பையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க இந்த கூட்டத்தில் இரு கட்சித் தலைவர்களும் ஒருமித்த முடிவை எடுத்தனர். அத்துடன் அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்தித்து பேசுகிறார்கள். இதன் பிறகு கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டம் வெளியிடப்பட்டு ஆட்சியமைப்பது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.