நாசிக்:

மகாராஷ்டிராவில் 3 தலித் வாலிபர்களை ஆணவக்கொலை செய்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதி க்கப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் அஹமந்த்நகரை சேர்ந்த கரு (வயது 24). இவரது நண்பர்கள் தன்வார், கந்தாரே. 3 பேரும் நெவேஸா பகுதியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் பணிபுரிந்து வந்தனர். அப்போது அந்த கல்லூரியில் பயின்ற சோனாய் கிராமத்தை சேர்ந்த உயர் சமூக பெண்ணுடன் கருவுக்கு காதல் மலர்ந்துள்ளது. திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருட்டுத் தனமாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் 2013ம் ஆண்டு கருவை துண்டு துண்டாக வெட்டி செப்டிக் டேங்கில் போட்டு மூடினர். 2 நண்பர்களையும் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து பாழடைந்த கிணற்றில் புதைத்தனர். 3 பேரும் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அனைவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

உடல்களை கைப்பறறிய போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரித்த நாசிக் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தந்தை உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 6 பேரும் தலா 20 ஆயிரம் ரூபாயை கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி வைஷ்ணவ் தீர்ப்பளித்தார்.