மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே பாஜகவில் இருந்து விலகல், சரத்பவார் கட்சியில் சேர முடிவு…

மும்பை:  மகாராஷ்டிரா மாநில முன்னாள்  பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்ஷே,  பாஜகவில் இருந்து விலகி உள்ளதாகவும் அவர்,  தனது ஆதரவாளர்களுடன்  சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜக தலைமைமீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சரான ஏக்நாத் கட்சே  கட்சியில் விலகி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்த் பாட்டீல்,  காட்ஸே “சிறிது காலத்திற்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேற முடிவு செய்திருந்ததாகவும்,  தற்போது அவர் பாஜக மீது கொண்டுள்ள அதிருப்தி காரணமாக, தனது ஆதரவாளர்களான பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார், வரும் வெள்ளிக்கிழமை அவர் தங்களது கட்சியில் இணைவார் என்று தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்ஸே கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவல் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யா, கட்சியில் இருந்து விலகுவது தொடர்பாக அவருடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தோம். இது செயல்படவில்லை. அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறோம் என்று கூறியவர்,  ஒரு சிறிய கட்சி தொண்டர் கூட பாஜகவை விட்டு வெளியேறுவது கட்சிக்கு ஒரு இழப்பு ”என்று தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே நடைபெற்று வந்த தேவேந்திரபட்நாவிஸ் தலைமையிலான ஆட்சியின்போது, ஏக்நாத் கட்சே  அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அவர்மீது நில முறைகேடு மற்றும்,   பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் சர்ச்சைக்கு சர்ச்சை எழுந்தது. அதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தலைமையால் வலியுறுத்தப்பட்டார். அதையடுத்து, ராஜினாமா செய்த அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டதால், தற்போது பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.