மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களது கடனை தள்ளுபடி செய்யாத காரணத்தினால், தாங்கள் உற்பத்தி செய்யும் எந்த பொருளையும் விற்பனைக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தினால் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து விற்பனைக் கூடங்களும் இன்று முதல் வியாபாரம் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மராட்டிய விவசாயிகள், தங்களது கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் என ஆளும் பிஜேபி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். கடந்த செவ்வாய் அன்று விவசாயிகள் கிசான் கிராந்தி மோர்சா குழுவின் தலைமையில் முதல்வர் தேவேந்திர பட்ணாவிஸிடம் இந்த கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

முதல்வரிடம் இருந்து தங்களின் கோரிக்கைக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்காத நிலையில் இந்த வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். மும்பைக்கு பெருமளவு காய்கறிகள் நாசிக் மாவட்டத்தில் இருந்து வருகிறது. நாசிக்கில் உள்ள அனைத்து கிராமத்தில் உள்ள விவசாயிகளும், தங்களது ஊரிலிருந்து எந்த ஒரு பொருளையும் அனுப்ப முடியாது என கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
இதற்கு உள்ளூர் தலைவர்களும் பெரு விவசாயிகளும், தங்களிடமுள்ள குளிரூட்டும் நிலையங்களில் காய்கறிகளை போராட்டம் முடியும் வரை வைத்து பாதுகாக்கலாம் என அறிவித்து ஆதரவை தெரிவித்துள்ளனர்.

பிம்பளகாவ் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி ஜெயந்த் டியோகர் என்பவர் கூறுகையில்,‘‘ விளைபொருட்கள் பாழாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், அதனால் இந்த போராட்டத்துக்கு ஒரு முடிவு காணும் வரை தங்களின் குளிரூட்டும் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளில், ‘‘வட்டியில்லா பயிர்க்கடன், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம், தடையில்லா மின் விநியோகம், பாலுக்கு குறந்த பட்ச விலையாக லிட்டருக்கு 50 ரூபாய்’’ ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி கூறுகையில், ‘‘அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது தற்போது இயலாத காரியம். அரசு விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்திருப்பதாகவும், நகரங்களில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனவும் தெரிவித்தார்.