மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 17ம் தேதி முதல் உள்ளூர் ரயில்களில் பெண்கள் பயணிக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான உத்தரவை மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் பிறப்பித்து உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: அனைத்து பெண்களும், அவசரகால சேவைகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் அலுவல்களுக்காகவோ  உள்ளூர் ரயில்களில் நாளை முதல் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, மீண்டும் இரவு 7 மணி முதல் அன்றைய தினத்தின் கடைசி ரயில் சேவை வரை அவர்கள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று எதிரொலியாக, மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ரயில்வேயில் இன்று முதல் குளிரூட்டப்பட்ட உள்ளூர் ரயில் சேவைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 ஏசி ரயில்களில், இரண்டு ரயில்கள் மஹாலக்ஷ்மி- போரிவாலி மற்றும்  போரிவலி – சர்ச் கேட் இடையே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 8 ரயில்களில் 4 சர்ச் கேட்-விரார் இடையேயும்,  மற்ற 4ம் மறுமார்க்கமாக விரார்-சர்ச் கேட்டுக்கும் இடையே இயங்கும்.
முன்னதாக, மகாராஷ்டிரா அரசு அக்டோபர் 14 ம் தேதி மும்பையில் மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது, குறிப்பிடத்தக்கது.